அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் இங்கிலாந்து விமானப்படைத் தளம் ஒன்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர், பயங்கரவாதச் செயல் ஒன்றைத் திட்டமிட்டதாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் பிரிட்டிஷ் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர் சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த விசாரணை தொடர்பாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அந்த நபர்கள் இராணுவத் தளத்திற்கு “பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த” முயன்றதாகத் தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஈரான் போரின் போது அமெரிக்க விமானப்படை நீண்ட தூர கனரக குண்டுவீச்சுப் பணிகளை மேற்கொண்ட தளமான, ரோயல் விமானப்படை ஃபேர்ஃபோர்டிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ள, இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் இருக்கும் வெல்ஃபோர்டு பகுதியில் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையை முன்னெடுத்து வரும் ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு காவல் பிரிவு, பயங்கரவாதச் செயல் ஒன்றைத் திட்டமிட்டதாகவும், பிரிட்டனின் வெடிபொருள் சட்டத்தை மீறியதாகவும் சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பிறகு, இராணுவத் தளத்தை நோக்கிச் சென்ற மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் குறித்து ஒருவர் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் அனைவரும் காவலில் எடுக்கப்பட்டதாக உள்ளூர் காவல் துறை அதிகாரியான உதவித் தலைமை கான்ஸ்டபிள் ரிச்சர்ட் ஓகோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.













