நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக டி. ஜே. ராஜகருணா ‘ தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. எம்மிடம் தேவையான அளவு எண்ணெய் கையிருப்பு உள்ளது. எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.தனியார் நிறுவனங்கள் தமக்கு நஷ்டம் என்பதால் சில பகுதிகளில் எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அப்படியான இடங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் இல்லை என்றால், அந்த இடங்களில் வரிசைகள் உருவாகின்றன.அதுவே பிரச்சினையாக மாறியுள்ளது. செபெட்கோ நிரப்பு நிலையங்கள் அருகில் இல்லாத 52 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
செயலாளரின் தலைமையில் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து நடாத்தப்பட்ட கலந்துரையாடலில், அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
உண்மையில் அவர்கள் தமக்கு நஷ்டம் என்பதால் எண்ணெய் விநியோகிப்பதைக் குறைத்தனர். விநியோகிக்கும் அளவிலிருந்து அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால் சில பிரதேசங்களில் அவர்களது எண்ணெய் விநியோக குறைபாடு காரணமாக சில இடங்களில் சிறிய வரிசைகள் வரக்கூடும் என தலைவர் டி. ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
















