இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கிண்ண (Syed Mushtaq Ali Trophy) இருபதுக்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்காக பீகார் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் தனது முதல் மூத்தோர் (Senior) கிரிக்கெட் போட்டிக்கான தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, வரும் நவம்பர் 14 ஆம் திகதி தொடங்கும் இந்த தொடரில் மாநில அணியை முன்னின்று நடத்தவுள்ளார்.
இந்தூரில் நடைபெற உள்ள இந்தப் போட்டிகளுக்காக பீகார் கிரிக்கெட் சங்கம் (BCA) 17 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர், ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கிண்ண’ (Rising Stars Asia Cup) தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் அரங்குகளில் ஏற்கனவே முத்திரை பதித்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு இது ஒரு முக்கியமான பொறுப்பாகும்.
கடந்த ஆண்டு, ரஞ்சி கிண்ண தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்காக சகிபுல் கனி தலைவராகச் செயல்பட்டபோது, வைபவ் பீகார் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















