வீரவில திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர், முகாம் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மான் ஒன்றின் குத்துக் காயத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகாம் வளாகத்தில் சுதந்திரமாக நடமாடிய மான் ஒன்று குறித்த கைதியை முட்டித் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய வாரபலான பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தெபரவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (நவம்பர் 09) பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














