பங்களாதேஷில் பதவியிறக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து நாடு திரும்புவதற்கான தனது திட்டத்தின் ஒரு முக்கிய நடவடிக்கையாக அவர் இதனை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர், ஷேக் ஹசீனாவுக்குப் பயண ஆவணங்களை வழங்குவதற்குப் பதிலாக, அவரை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஹசீனா எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் ஒரு பயங்கரவாதி.
தலைமறைவாக இருப்பவர். பங்களாதேஷத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைமுறையில் உள்ள நாடுகடத்தல் ஒப்பந்தம் ஒன்று உள்ளது என்று கபீர் செய்தியாளர்களிடம் கூறியதாக, வங்கதேச செய்தி இணையதளமான ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) செய்தி வெளியிட்டுள்ளது.
கடவுச்சீட்டு தேவை என்ற வாதத்தை நிராகரித்த அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நாடுகடத்தல் பொறிமுறையின் மூலமே அவரைத் திரும்பக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹசீனாவின் சட்டத்தரணிகள், புதிய பயண மற்றும் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்காக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அந்த கடிதத்தை அணுகிய ரொய்ட்டர்ஸ், 2024 ஆகஸ்டில் பங்களாதேஷில் மாணவர்கள் முன்னெடுத்த வன்முறைப் போராட்டத்தைத் தொடர்ந்து, தனது 20 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஹசீனா மேற்கொண்ட முதல் தொடர்பு இதுவே என்று குறிப்பிட்டுள்ளது.














