நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினருக்கு எதிராகக் கோட்டை நீதிவானால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டைப் பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரொஹான்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே இந்த முறைப்பாடு பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான உதய கம்மன்பில சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தனது சமர்ப்பணங்களை முன்வைக்கத் தொடங்கினார்.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாகத் தனது கட்சிகாரர் ஜூன் மாதம் 07ஆம் திகதி யூடியூப் தளமொன்றிற்கு வெளியிட்டகருத்தின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு நீதவான் முறைப்பாடு செய்துள்ள போதிலும், தனது கட்சிகாரர் ஜூன் 07ஆம் திகதி குறித்த கூற்றை வெளியிட்டார் என்பதற்கான திகதியோ நேரமோ அந்த யூடியூப் காணொளியில் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் மேலும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியில், தனது கட்சிகாரர் ஜூன் 07ஆம் திகதியே குறித்த கூற்றை வெளியிட்டார் என நீதவான் எவ்வாறு தீர்மானித்தார் என்றும் அவர் மேலும் கேள்வியெழுப்பினார்.
இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களால் நீதிமன்ற அவமதிப்பு நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியே கோட்டை நீதவான் இம்முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளார்.














