நில்வலா மற்றும் கிங் கங்கை ஆறுகளை அண்மித்த சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், நில்வளா கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மகா ஓயாவின் சில பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நில்வலா கங்கையின் அக்குரஸ்ஸ மற்றும் அதற்குக் கீழ்ப்பகுதிகளிலும், கிங் கங்கையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பத்தேகம மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அவதானிக்கப்படவில்லை. இருப்பினும், சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் தொடர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
களுகங்கையின் மேல் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. எனினும், மில்லகந்த மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் நீர்மட்டம் சிறியளவிலான வெள்ள அபாய எல்லைக்கு அண்மையில் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மகாவலி கங்கையின் மேல் பகுதிகளில் அபாயகரமான நீர்மட்ட அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை.
எவ்வாறாயினும், நில்வலா மற்றும் கிங் கங்கை உள்ளிட்ட ஈர வலயத்தின் ஏனைய ஆறுகளிலும் நீர்மட்டம் ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும், எதிர்கால மழைவீழ்ச்சியைப் பொறுத்து அவை விரைவாக அதிகரிக்கக்கூடும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறுகிய காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்பதால், ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களுக்கு ஏற்ப வான்கதவுகள் திறக்கப்படும் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
















