யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19) இரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணங்கள் இன்று முன்னெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரச் சுட்டெண் 200 என்ற எல்லையைக் கடந்து “மிகவும் ஆரோக்கியமற்ற” நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயலின் தாக்கத்தால் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் எல்லை கடந்து வீசும் மாசடைந்த காற்று ஆகியவற்றாலேயே, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.















