பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள Co-op Live இசை அரங்கில் ஏற்பட்ட அவசர நிலையை அடுத்து அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த அரங்கில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரசாயனப் பொருள் ஒன்று வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பலருக்கு கண் எரிச்சலும் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் விரைந்து சென்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, அவசர மருத்துவப் பிரிவினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவப் பணியாளர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மான்செஸ்டர் ரோயல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை பாரிய காயங்கள் எதுவும் பதிவாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த பொருள் என்ன, அது எவ்வாறு அரங்கிற்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















