இலங்கையின் தற்போதைய பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் கொள்கை ரீதியான அர்ப்பணிப்புகள் குறித்த சாதகமான மதிப்பீட்டைத் தொடர்ந்து, இந்த நிதியுதவியை வழங்க ஒபெக் நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கைச் செயற்பாட்டின் (Development Policy Operation) கீழ் வழங்கப்படும் நிதியுதவிக்குப் பக்கபலமாக இந்தத் தொகை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, ஒபெக் நிதியத்தின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து 24 மில்லியன் டொலர்களையும், விசேட மூலதன வளங்களிலிருந்து 6 மில்லியன் டொலர்களையும் உள்ளடக்கியுள்ளது.
இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.













