இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) இடம்பெற்றதாகக் கூறப்படும் 31 இலட்சம் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் டி.டி. ஆனந்த பாலித்தவை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் லியான் வாருஷ விதான இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015 – 2019 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














