அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், சுமார் 62 கிலோ எடையுடன் சாலையோரத்தில் காணப்பட்ட தெருநாய் ஒன்றை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டுள்ளனர்.
பவுல்டர் நெடுஞ்சாலைக்கு அருகில் மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்ட 8 வயதுடைய பிட்புல் வகை நாயை, ‘தி அனிமல் பவுண்டேஷன்’ அமைப்பினர் மீட்டு ‘கிங்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
பொதுவாக வளர்ந்த பிட்புல் நாயொன்றின் எடை 23 முதல் 27 கிலோ வரை காணப்படும் நிலையில், இந்த நாய் 62 கிலோ எடையுடன் காணப்பட்டமை மீட்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில், ‘கிங்’ நாய்க்கு ஹைப்போ தைராய்டிசம் எனப்படும் தைராய்டு சுரப்பிக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படாத இந்தக் குறைபாடும், முன்னர் அதனை வளர்த்தவர்கள் அளவுக்கு அதிகமாக உணவளித்திருக்கக்கூடும் என்பதும் அதன் உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தன்னார்வலர் ஒருவரின் பராமரிப்பில் உள்ள ‘கிங்’, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவதற்கான சிறப்பு சிகிச்சைகளைப் பெற்று வருகிறது. அதனை அன்புடன் தத்தெடுத்து வளர்க்கும் புதிய குடும்பமொன்றைத் தேடும் பணியிலும் விலங்கு நல ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.















