தனது உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகள் விதிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற தடுப்பூசி தேசியவாதத்தால் கொரோனா நெருக்கடியிலிருந்து அனைவரும் மீள்வதற்கு காலதாமதம் ஆகும்.
கொரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைப்பது சரியான நடவடிக்கையல்ல. அதன் காரணமாக, அந்த நோய் பரவல் தீவிரம் காட்டுத் தீ போல் நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும். நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு அதிக காலம் ஆகும். இதன் காரணமாக, உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும்’ என கூறினார்.
உலகின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் இஸ்ரேல், பிரித்தானியா போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
சுமார் 45 கோடி பேர் வசிக்கும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில், கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே 4 லட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.