பிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு, குறித்த கல்வியலாளர்கள் தெரியாமல் உதவி செய்தார்களா என்ற சந்தேகத்தில் இவ்வாறு விசாரணை இடம்பெறுவதாக டைம்ஸ் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக உணர்திறன் வாய்ந்த பாடங்களில் உள்ள அறிவுசார் சொத்துக்கள், நட்புநிலையற்ற நாடுகளுக்கு ஒப்படைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, பெயரிடப்படாத ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மேம்பட்ட இராணுவத் தொழில்நுட்பங்களான விமானம், ஏவுகணை வடிவமைப்புகள் மற்றும் சைபர்வீபன்கள் போன்றவற்றின் அறிவாற்றல் சீனாவிற்கு வழங்கப்படுதாக சந்தேகிக்கப்படும் கல்வியலாளர்களுக்கு அமுலாக்க அறிவிப்புகளை அனுப்ப அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஆணை 2008ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டால், தனிநபர்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
மேற்படி, அறிவாற்றல் அல்லது ஆராய்ச்சி சீனாவிற்கு பேரழிவு ஆயுதங்களை உருவாக்க உதவக்கூடும் என்றும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பு கவலை கொண்டுள்ளதாக டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.