ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் பங்கேற்கும் இத்தொடர், கடினத்தரையில் நடைபெறும் ஒரு தொடராகும்.
தற்போது இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் முக்கிய சில போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்காவும், போர்துகலின் பெட்ரோ சோவுசாவும் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆதிக்கம் செலத்திய ஸ்டென் வவ்ரிங்கா 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் ஜோன் மில்மேனும் பிரான்ஸின் கொரேன்டின் மவுடெட்டும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கொரேன்டின் மவுடெட் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.
இந்த செட்டில் கடுமையாக போராடி ஜோன் மில்மேன் 7-6 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.
இன்னமும் ஒரு செட்டைக் கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஜோன் மில்மேன், கடும் சவாலை எதிர்கொண்டார்.
தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய கொரேன்டின் மவுடெட், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-2, 6-3 என கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.
அடுத்ததாக பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஜேர்மனியின் லாரா சீகமண்ட்டை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், எவ்வித நெருக்கடியையும் எதிர்கொள்ளாத செரீனா வில்லியம்ஸ், 6-1, 6-1 என இலகுவாக செட்டுகளை கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்தேசியா
பவ்லியுசென்கோவாவுடன் மோதினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய நவோமி ஒசாகா, 6-1, 6-2 என செட்டுகளை கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.