பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியப் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகவும் வலுவான செயற்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் எனவும் குற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துச் செயலாளர் கிரான்ட் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் COVID-19 தொற்று மற்றும் உருமாறிய புதிய வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
முதன்முறையாக, இங்கிலாந்துக்கு வருவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்களை உள்ளடக்கிய கடுமையான புதிய விதிகள் வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இங்கிலாந்தின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் உருமாறிய வைரஸ் பரவலைத் தடுப்பதற்குக் கடினமான புதிய கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புச் செயலாளர் மற் ஹன்கொக் கூறியுள்ளார்.
எதிர்வரும், திங்கட்கிழமை முதல், இங்கிலாந்திற்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும், எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தின் இரண்டாவது மற்றும் எட்டாவது நாளில் இரண்டு கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் நுழைபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்ட, எதிர்மறையான கொரோனா பரிசோதனைச் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.