தமிழ் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட நாள் பேரணி ஒன்றை வெற்றிகரமாக முடிக்கும்போதே பேரணியில் கலந்துகொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே மோதத் தொடங்கிவிட்டன. பேரணி முடிந்த கையோடு அசிங்கமான விதத்தில் ஒருவரையொருவர் வசைபாடி பொதுவெளியில் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதேபோன்றதொரு நிலைமைதான் சில கிழமைகளுக்கு முன்பு ஐ.நா.வுக்கு இம்மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு பொது ஆவணத்தை அனுப்பிய பின்னரும் ஏற்பட்டது. உலகச் சமூகத்தை நோக்கி கடந்த பத்தாண்டுகளில் அனுப்பியராத ஒரு வெற்றிகரமான ஆவணத்தை அனுப்பிய கையோடு இதில் சம்பந்தப்பட்ட கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிக்கத் தொடங்கின. ஊடகங்கள் ஒருவித சுவாரஸ்யத்தோடு அந்த மோதலை உருப் பெருக்கத் தொடங்கின.
இம்மோதல்களின் போதும் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிக்குப் பின்னரான மோதல்களின் போதும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். அது என்னவெனில் இவ்விரண்டிலும் ஏற்பாட்டாளர்களாகக் காணப்பட்ட சிவில் சமூகத்தினர் மீது கட்சிகள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றன. அல்லது தமது சண்டைக்குள் நுழைந்து விலக்குப் பிடிக்குமாறு கேட்கின்றன.
ஜெனிவாவுக்கு ஒரு பொதுக் கோரிக்கையை அனுப்பியபின் முதல் பிரச்சினை கையெழுத்தில் தொடங்கியது. அதிலிருந்து தொடங்கி நான் தியாகி, நீ துரோகி என்று ஒருவர் மற்றவரைக் குற்றஞ்சாட்டும் ஒரு வளர்ச்சிக்கு அதுபோனது. அதன்போது, அந்த ஒருங்கிணைப்பை மேற்கொண்ட மூன்று செயற்பாட்டாளர்களையும் நோக்கி கட்சித் தலைவர்கள் கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு பதில் கூறுமாறு பொது வெளியில் கோரிக்கை விடுத்தார்கள்.
சமாதான முயற்சியில் அனுசரணை புரிந்த மூன்று செயற்பாட்டாளர்களும் தொடக்கத்திலிருந்தே வாய் திறக்கவில்லை. ஊடகங்களுக்கு முன் தோன்றுவதையும் கருத்துக் கூறுவதையும் ஆகக்கூடியபட்சம் தவிர்த்தார்கள். அந்த முயற்சிகளை முன்னெடுத்த தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் சந்திப்புகளின் பின் தனது கருத்துக்களை ஆங்காங்கே தெரிவித்து வந்திருக்கிறார். எனினும், சந்திப்புகளின் போது மூன்று கட்சிகளுக்கும் இடையில் இடையூடாடி ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பதற்காக உழைத்த மூன்று செயற்பாட்டாளர்களும் இயன்றளவுக்கு பொதுவெளிக்கு வந்து விளக்கம் தருவதைத் தவிர்த்தார்கள்.
ஆனால், இயலாக்கட்டத்தின் முடிவில் ஐ.பி.சி. நிலைவரம் நிகழ்ச்சியில் தோன்றி விளக்கத்தைக் கொடுத்தார்கள். அப்பொழுது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட ஒரு கேள்விக்கு அம்மூன்று செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய கத்தோலிக்க மதகுரு பின்வரும் தொனிப்பட பதில் கூறினார், “எல்லா விடயங்களையும் சிவில் சமூகங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்பதும் தவறு, எதிர்பார்ப்பதும் தவறு. இதைச் செய்யவேண்டியது கட்சிகள்தான். தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டியது கட்சிகள்தான். கட்சிகளால் அவ்வாறு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தில்தான் நாங்கள் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டிய ஒரு நிலைமை வருகிறது” என்று சொன்னார்.
அதுதான் உண்மை. மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஜெனிவாவை எதிர்கொள்ளும் நிலைமை ஒன்று ஏற்கனவே இருந்திருந்தால் ஏன் சிவில் சமூகங்கள் தலையிட்டு ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும்? அதுபோலவே மூன்று கட்சிகளும் ஒன்றாகத் திரண்டு ஒரு பேரணியை ஒழுங்குபடுத்த முடியும் என்றால் ஏன் சிவில் சமூகங்களும் சைவச் சாமியார்களும் கிறிஸ்தவ போதகர்களும் இணைந்து ஒரு பேரணியை முன்னெடுக்க வேண்டும்?
இதுதான் பிரச்சினை. தமிழ் தேசியப் பரப்பில் மூன்று கட்சிகள் இருக்கின்றன என்றால் மூன்று நிலைப்பாடுகள் உண்டு என்று பொருள். இம்மூன்று கட்சிகளும் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு குறிப்பிட்ட சில விடயங்களில் ஒரு பொது முடிவுக்கு வரக்கூடிய பக்குவம் இல்லை என்ற காரணத்தால்தான் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டி வருகிறது. எனவே, மூன்று கட்சிகளின் இயலாமையை நோக்கியே அதிகம் கேள்வி கேட்க வேண்டும். மாறாக ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அல்லது ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகங்களை நோக்கிக் கட்சிகள் கேள்வி கேட்கும் ஒரு நிலைமை காணபடுகிறது. கட்சிகளால் முடியாத வெற்றிடத்தில் சிவில் சமூகங்கள் இவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பது ஒரு மகத்தான முன்னுதாரணம். ஆனால், இங்கே கடுமையாக விமர்சிக்க வேண்டியது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் அரசியல் தரிசனமும் வழி வரைபடமும் இல்லாத கட்சிகளைத்தான்.
கசப்பான உண்மை என்னவெனில், தமிழ் மக்கள் மத்தியில் பெருந் தலைவர்கள் கிடையாது. இருப்பவர்கள் எல்லாருமே கட்சித் தலைவர்கள்தான். அவரவர் தங்கள் கட்சிகளைக் கட்டி எழுப்புகிறார்கள். மக்களை வாக்காளர்களாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். மக்களை இப்படி வாக்காளர்களாகப் பிரித்தால் தேசமாகத் திரட்டுவது எப்படி?
இதுதான் பிரச்சினை. இதில் தமிழ் மக்களை ஒரு தேசமாக, ஒரு திரளாகத் திரட்ட வல்ல தலைவர்கள் யார்? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்று சிந்தித்தால் அவர்களை வாக்காளர்களாகப் பிரிக்கக்கூடாது. எனவே, இங்கே உள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா தலைவர்களுமே கட்சி நிர்மாணிகள்தான். தேச நிர்மாணிகள் அல்ல. தேச நிர்மாணிகளாக இருந்திருந்தால் தேசத்தை நிர்மாணிப்பது என்று சிந்தித்திருந்தால் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விதத்தில் எப்பொழுதோ தந்திரோபாய ஐக்கிய முன்னணிகளைக் கட்டி எழுப்பி இருப்பார்கள். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. அதன் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் வாக்குகள் சிதறின.
இப்பொழுது, அவர்களுக்கு ஐக்கியப்பட வேண்டிய தேவை வந்திருக்கிறது. அதுகூட தோல்வி கற்றுக் கொடுத்த பாடம்தான். தங்கள் தோல்வியில் இருந்து மீள்வதற்கு அவர்கள் ஐக்கியத்தை நோக்கி வருகிறார்களா? ஜெனிவாவுக்கு மூன்று கட்சிகள் அனுப்பிய ஆவணமும் அதன்பின் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான பேரணியும் ஒருவிதத்தில் கூட்டமைப்புக்கு வெள்ளையடித்து இருக்கின்றனவா? கூட்டமைப்பை அதன் தோல்விகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு இனிவரும் தேர்தல்களில் இவை உதவக் கூடும்.
குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் சாணக்கியன் சுமந்திரன் போன்றவர்கள் தங்களை கதாநாயகர்களாக முன்னிறுத்த முயற்சித்தார்கள். மிக குறிப்பாக சாணக்கியன் கிழக்கிலும் வடக்கிலும் ஆர்வத்தோடு பார்க்கப்படும் ஒருவராக மாறிவிட்டார். எனவே இது அதன் பூர்வ விளைவாக கூட்டமைப்பை பலப்படுத்துகிறது. அப்படி என்றால் ஜெனிவாவை நோக்கி மூன்று கட்சிகளை ஒருங்கிணைத்த சிவில் சமூகங்களும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் பேரணியை ஒழுங்கு படுத்திய சிவில் சமூகங்களும் கூட்டமைப்புக்கு வெள்ளையடிக்கும் வேலையைச் செய்தனவா? ஆம்! இந்தக் கேள்விக்கு சிவில் சமூகங்கள் பதில் கூற வேண்டும்.
கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது கட்சிகளுக்கு வெள்ளை அடிப்பது அல்ல. மாறாக தேசத்தைக் கட்டி எழுப்புவது. எனவே, சிவில் சமூகங்கள் கடந்த இரண்டு அனுபவங்களில் இருந்தும் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். கட்சிகளைக் கடந்து தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் தமது செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும். அதேசமயம், கட்சிகளுக்கும் சிவில் சமூகங்களுக்குமிடையிலான ஒரு பொருத்தமான செயற்பாட்டுப் பொறிமுறையை கண்டுபிடிக்கவேண்டும்.
சிவில் சமூகங்கள் ஒழுங்குபடுத்தும் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஹைஜாக் பண்ணும் ஒரு நிலைமை இனி வரக்கூடாது. அதுபோல, சிவில் சமூகங்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு கட்சிகளை அழைத்து உதவிகளை கேட்டுவிட்டு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக முன்னேறும் பொழுது, கட்சிகள் முன்னுக்கு வரக்கூடாது பின்னுக்குத்தான் வரவேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயமானது?
யூ.டி.வியில் சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சிவில் சமூகங்களின் பலவீனத்தை காட்டுகின்றன. அதுமட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் தொடங்கி ஊடகங்களில் சுமந்திரனும் கஜேந்திரக்குமாரும் மாறிமாறிக் கூறிவரும் கருத்துக்களும் சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் காணப்படும் பலவீனங்களை உணர்த்துகின்றன.
இதே நிலைமைதான், மூன்று கட்சிகளை ஒருங்கிணைத்து ஜெனிவாவுக்கு ஒரு பொது ஆவணத்தை அனுப்பியபோதும் ஏற்பட்டது. அப்பொழுதும் ஏற்பாட்டாளர்கள் நோக்கியே கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஏற்பாட்டாளர்களின் மீதே பழி விழுந்தது. அரசியலை தமது முழு நேரத் தொழிலாகக் கொண்ட கட்சித் தலைவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்யாதது மட்டுமல்ல, அதை சமூக நலன் கருதியும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடும் செய்ய முற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள். பொதுவெளிக்கு வர விரும்பாத செயற்பாட்டாளர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறார்கள். கட்சிகளுக்கிடையிலான அருவருப்பான மோதல்களில் தலையிட்டு சரி, பிழை கூறுமாறு கேட்கிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்குள் தமிழ் சிவில் சமூகங்கள் இரண்டு விளைவுகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றன. முதலாவதாக, அவை கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கின்றன. இரண்டாவதாக ஜெனிவாவை நோக்கி ஒரு பொது ஆவணத்தை தயாரித்திருக்கின்றன. மூன்றாவதாக கட்சிகளையும் பொது மக்களையும் இணைத்து ஐந்து நாள் பேரணி ஒன்றை ஒழுங்குபடுத்தியிருக்கின்றன.
இந்த இரண்டு அடைவுகளையும் சிவில் சமூகங்கள் மீளாய்வு செய்ய வேண்டும். சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்த இரண்டு அடைவுகளின் பின்னரும் ஏற்பட்ட அருவருப்பான கட்சி மோதல்கள் இனிவரும் காலங்களிலும் ஏற்படுவதைத் தடுக்கலாம்.