நாட்டில் 65 வயதுடையவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
முதியவர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான இலக்கை நிறைவு செய்யவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் உட்பட, அதன் முதல் நான்கு முன்னுரிமை பிரிவுகளில் உள்ள அனைவருக்கும் முதல் தடுப்பூசியை வழங்குவதற்கான காலக்கெடுவாக அரசாங்கம் திங்கட்கிழமை நிர்ணயித்துள்ளது.
தற்போதுவரை 14.56 மில்லியன் மக்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர் என தேசிய சுகாதார சேவையின் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கொரோனா தொற்றினால் 120,000 க்கும் அதிகமான மரணங்களை சந்தித்துள்ள பிரித்தானியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தாடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.