கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் மூடப்பட்ட 20 எல்லைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறப்பதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்ட பின்னர் ஜனவரி 11 அன்று தென்னாபிரிக்கா அண்டை நாடுகளுடனான எல்லைகளை மூடியது.
அத்தோடு பல நாடுகள் தென்னாபிரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு அந்நாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.
கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டுடன் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலைகளால் தென்னாபிரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோயாளிகளும் 47,000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.