கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி நேற்று (சனிக்கிழமை) பதவியேற்றார்.
இத்தாலியின் முக்கிய கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மரியோ டிராகிக்கு ஆதரவினை வழங்கியுள்ளன.
அத்தோடு அவரது அமைச்சரவையில் சட்டமியற்றுபவர்கள், பொருளாதார வல்லுநர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களும் முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர்.
பிரதமராக பதவியேற்கும் அவர் தொற்றிலிருந்து இத்தாலியை மீட்பது குறித்தும் மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நிதியம் குறித்தும் செயற்பட வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
மரியோ டிராகி பிரதமராக பதவியேற்றமைக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், “இந்த கடினமான காலங்களில் இத்தாலி மற்றும் ஐரோப்பாவிற்கு அவரது நியமனம் மிகப்பெரிய சொத்தாக இருக்கும்” என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லயன் தெரிவித்துள்ளார்.