ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிசேட ஆலோசனை வழங்கியுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எதிர்காலத்தில் தலைத்தூக்காத அளவிற்கு பல விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையின் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளை வெகுவிரைவில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி தொடர்புப்பட்ட தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் பின்னணி கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்காது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மக்கள் நியாயம் கோரி ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கறுப்பு ஞாயிறு தின போராட்டத்தில் ஈடுப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.
அறிக்கையின் யோசனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.