வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 15ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் பங்களாதேஷ் ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஹமட் 39 ஓட்டங்களையும் சர்கார் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நிட்னி மற்றும் சபாலாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ருகர், சோண்டெக்கி மற்றும் டி பிரையன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் சார்பாக, புட்டிக் ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களையும் வென் வைக் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 54 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட புட்டிக் தெரிவுசெய்யப்பட்டார்.