சென்னையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை, சில வாக்குச்சாவடி மையங்களுக்கு பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்போது அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவர் அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சென்னை பொலிஸ் எல்லைக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலைவிட சுமார் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 852 வாக்குச்சாவடிகள் சென்னை பொலிஸ் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் மத்திய துணை இராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இங்கு கேமரா மூலம் ஓட்டுப்பதிவு நடப்பதை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதேபோல ஓட்டு எண்ணும் இடங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளிலும் பலத்த பாதுகாப்பு இருக்கும். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.