கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
‘க்வாட்’ கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என்று க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மறைமுகமாகக் கருத்து தெரிவித்ததன் பின்னணியில் சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவர்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்நாட்டின் ஆதிக்கமுமின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ‘க்வாட் மாநாடு’ குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பெய்ஜிங்கில் கருத்து தெரிவித்த போது,
‘பிராந்தியத்தின் ஒருமைப்பாடு, அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரத்யேக குழுக்களை அமைத்து சிதைக்கக் கூடாது. பனிப்போர் மனநிலையில் செயற்படுவதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பிராந்தியத்தில் சீனாவால் அச்சுறுத்தல் நிலவுவதாக சில நாடுகள் மிகைப்படுத்திக் கூறி வருகின்றன. இதுபோன்று கூறி, பிராந்திய நாடுகளுடன் பிளவு ஏற்படுத்தும் முயற்சியை சீனா எதிர்க்கிறது.
இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், பிராந்திய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிராகச் செயற்பட்டு வருகின்றன.
பிராந்தியத்தில் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு எதிராகவும் அந்நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காது.
பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் ஏற்படும் வகையில் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். உலகமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக பிரத்யேக குழுக்களை அமைத்து செயற்படுவது, சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
குறிப்பிட்ட கொள்கைகளுக்காக மற்ற நாடுகளைக் குறிவைத்து செயற்படுவதை அக்குழுக்கள் தவிர்க்க வேண்டும். அமெரிக்கா சரியான பாதையில் பயணிக்க வேண்டும். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அந்நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்’ என கூறினார்.