கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்ள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதன்போது, ஏற்கனவே 761 மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் தடுப்பூசி செலுத்த விரும்பும் தனியார் மருத்துவமனைக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தடுப்பூசி டோஸ்களுக்கு ஏற்றவாறு, நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏற்கனவே செயற்படுத்தியவாறு, கூடுதலாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுக்க சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேநேரம், நோய் தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா மையங்களை பொறுத்தவரை, தேவையான வைத்தியர்கள் மற்றும் தாதிகளை நியமிக்கவும் அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளூராட்சி அமைப்புகள் இணைந்து செயற்படுத்தி நோய் தொற்றுகள் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிவெடுக்கப்பட்டது.