தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் இந்தத் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
அதில் முக்கியமாக, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைவதற்கு, சீற் (SEET) என்ற பரீட்சை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் அனைவருக்கும் உலகத் தரம்வாய்ந்த மருத்துவம் மற்றும் கல்வி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு தொழில்துறையை மேம்படுத்துவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, தமிழ் மொழியை கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழியாகக் கொண்டு வருவது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சாதி, மத வேறுபாடுகள் அற்ற தூய மக்களாட்சியை ஏற்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமையை வழங்க வலியுறுத்தப்படும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.