பிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மாநில தலைவர்கள் மற்றும் இலங்கை, நேபாளம், பூட்டான் , மாலைத்தீவு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வெவ்வேறான நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.
பங்களாதேஷுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். எந்தவொரு உச்சி மாநாடும் இல்லாமல், ஐந்து நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், 10 நாட்களுக்குள் பங்களாதேஷ்க்கு இவ்வாறு சென்றதில்லை என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.
பத்து நாட்கள் கொண்டாட்டம் தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் மேலும் கூறியுள்ளதாவது, “இது மிகவும் அசாதாரண நேரம். (கொவிட்- 19) ஆனால் அயல்நாடுகளின் மாநில தலைவர்கள் தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தர இருக்கின்றனர்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் விஜயத்தின்போது, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, டாக்காவுக்கு வெளியே மூன்று இடங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இருதரப்பினரும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.
எனினும் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்நிகழ்வு குறித்து வெளிவிவகார செயலாளர் மசூத் பின் மோமன் கூறியுள்ளதாவது, “பேரழிவு மேலாண்மை மற்றும் இரு நாடுகளின் சில நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம்.
தற்போது நாங்கள் ஒவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தயார் செய்துக்கொண்டிருக்கின்றோம். ஓரிரு நாட்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி பிரதிகளை பெற்றுக்கொள்ள இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வெளிநாட்டு தலைவர்களும், சுதந்திர தின தியாதிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக சவாரிலுள்ள தேசிய நினைவுச் சின்னத்தை பார்வையிடுவார்கள்.
தன்மொண்டி 32இல் உள்ள பங்கபந்து அருங்காட்சியகம் மற்றும் பங்களாதேஷ் ஸ்தாபக தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அதேபோன்று சிறப்பு இராணுவ அணி வகுப்புக்களை பார்வையிடுவதற்கும் சிறப்பு விருந்துகளில் கலந்துகொள்வதற்கும் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இதேவேளை பிரதமர் மோடி, துங்கிபாரவியில் அமைந்துள்ள பங்கபந்து சந்நிதியையும் டாக்கா வெளியே காணப்படுகின்ற இரண்டு இந்து ஆலயங்களான கோபல்பஞ்சி மற்றும் தென்மேற்கு சத்கிராவில் உள்ள இந்து ஆலயத்தையும் பார்வையிடவுள்ளார்.
குறிப்பாக இந்து மாதுவா சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள், மாதுவா சமூக உறுப்பினர்கள் ஏராளமானோர் மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர்.
இதேவேளை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல் வெளிநாட்டு பிரமுகராக மலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், கடந்த மார்ச் 17ஆம் திகதி, மூன்று நாள் விஜயமாக பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2 நாள் விஜயமாக மார்ச் 19ஆம் திகதி, பங்களாதேஷை சென்றடைந்தார்.
நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, மார்ச் 22 முதல் இரண்டு நாள் விஜயத்தில் டாக்காவில் இருப்பார். பூட்டானின் பிரதமர் லோடே ஷெரிங், மார்ச் 24 முதல் 25 வரை டாக்காவில் இருப்பார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 26ஆம் திகதியன்று பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டு மறுநாள் இந்தியாவை சென்றடைவார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சில உயர்மட்ட தலைவர்கள் இந்த நிகழ்வில் காணொளி செய்திகளை அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.