அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் மாநாட்டில், தலிபான் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர் சுஹைல் ஷஹீன் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளபடி அமெரிக்கப் படையினர் அனைவரும் கெடு திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்.
மே 1ஆம் திகதிக்கு மேலும் அந்த நாட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்’ என கூறினார்.
ஆப்கானிஸ்கானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கட்டார் தலைநகர் டோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் பல மாதங்களாக நீடித்து வந்த பேச்சுவார்த்தையில் கடந்த 2020ஆம் ஆண்டு உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி, பயங்கரவாதச் செயல்களைக் கைவிட தலிபான் அமைப்பும், ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்படியாக வெளியேற அமெரிக்காவும் ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், அமெரிக்காவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அளித்துள்ளது.