வடக்கில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண், சாவகச்சேரி வைத்தியசாலையில் கோரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண், முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.