தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் என்பன ஏப்ரல் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல், கடந்த 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 19ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேபோல கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனுவும் கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதேபோல சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் உதயநிதியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேபோல திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமானின் வேட்பு மனுவும் கோவில்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனின வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதேநேரம் மனுவை மீளப் பெற விரும்புவோர், நாளை மாலைக்குள் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மாலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.