இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதனை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றி இருபதுக்கு இருபது தொடரை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அணித்தலைவர் விராட் கோலி 80 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களையும் பெற, ஹார்டிக் பாண்ட்யா அட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் அடில் ரஷீத் மற்றும் பென ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இனி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர் 52 ஓட்டங்களையும் டேவிட் மாலன் 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக புவனேஷ்வர் குமாரும் தொடரின் நாயகனாக விராட் கோலியும் தெரிவு செய்யப்பட்டனர்.