வன்னியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா இன்று விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் திருவிழாவில் இறுதியாக எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பங்குனி உத்தரப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
இந்த ஆலயத்தின் தொன்றுதொட்டு பாரம்பரிய முறைப்படி இன் (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏழு மணிக்கு விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைக்கப்பட்டு பண்டைய மரபுகளுக்கு அமைவாக மீசாலை புத்தூர் சந்தியில் இருந்து பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் அடியார்கள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்தவுடன் பொங்கல் விழா நடைபெறும்.
இவ்வாண்டு, கொரோனா தொற்றினைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களே அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்திகளை நிறைவேற்றுபவர்கள் விரைவாக ஆலயத்தில் இருந்து வெளியேறி நேர்த்திக்கடன்களை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை காவடி, பாற்செம்பு மற்றும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் காலத்தில் ஆலயச் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற பொதுப் பேருந்து சேவைகளுக்கோ எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் அடியவர்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
அடியார்கள் ஆலயத்துக்கு வருகைதந்து நேர்த்திகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்வது.
அத்துடன், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாதுகாப்பினையும் ஏனையவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.
இதேவேளை, பொங்கல் உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று கூட்டத்திற்கு அமைவாக பொங்கல் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.