வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் குறித்த பட்டதாரிகள் ஆசிரியர்களாக கடமையாற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முற்றுகையிட்ட மாணவர்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு பொலிஸாரும் விரைந்திருந்தனர்.
இந்நிலையில் பிரதேச செயலாளர் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் சிலருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து சென்றிருந்தனர்.