கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி வழங்கல் தொடர்பாக, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இந்த வாரம் தனது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தயாராகிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை, மெய்நிகர் கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்தவுள்ளனர்.
ஆனால், ஏற்றுமதி தடை விதிக்கப்படுவதை நிறுத்த, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 32,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் அமெரிக்க சோதனையின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள், பாதுகாப்பானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகிறது.
எனினும், பல ஐரோப்பிய தலைவர்கள் இரத்த உறைவு காரணத்தை முன்னிறுத்தி தடுப்பூசி விநியோகத்துக்கு தடைசெய்யுமாறு கோருகின்றனர்.
ஆனால், இந்த தடுப்பூசி இரத்த உறைவுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் 12 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தடுப்பூசி பெற்றதாகக் கூறப்படுகிறது, இது பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமாக உள்ளது.