கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. ஆகையால் அதனை இந்தியாவுக்கு ஒருபோதும் தாரைவார்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கச்சதீவு இலங்கைக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதென இந்திய மத்திய அரசு ஒப்பந்தமொன்றில் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்திய அரசியல்வாதிகள், கச்சதீவை தொடர்ந்து உரிமை கோருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் குறித்த ஒப்பந்தத்தில், இருநாடுகளைச் சேர்ந்த மக்களும் வருடா வருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியர் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ளுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக கச்சதீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.