வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தில் பறக்கும் படை உள்ளிட்ட குழுவினர் நடத்திய சோதனையில் 231.63 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 ஆயிரத்து 122 முறைப்பாடுகள் கிடைக்பெற்பெற்றதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சுகாதாரத் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆகையால் கொரோனா காரணமாக தேர்தல் பிற்போடப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 ஆயிரத்து 255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஆயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.