குடியுரிமை திருத்தச் சட்டமூலம் நிச்சயமாக அமுல்படுத்தப்படும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவிற்கு வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரியான கால அவகாசத்தில் அந்த சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டமூலத்தை அசாம் மாநிலத்தில் அமுல்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்.
ஆகையால் இது அறியாமையால் கூறப்பட்டதா அல்லது மக்களை ஏமாற்ற கூறப்பட்டதா எனத் தெரியவில்லை.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் 10 உறுதி மொழிகளை அளித்துள்ளோம். பழங்குடியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வழிப்பாட்டு தலங்களும் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.