காடழிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சுற்றுச்சூழலை அழித்து வந்தவர்கள் தற்போது தனியார் நிலங்களில் மரங்களை வெட்டுவதைக்கூட பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு என கூறிவருவதாகவும் அவர் சாடினார்.
கொலன்னாவையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியைப் போல சுற்றுச்சூழலை நேசிக்கும் எவரும் இல்லை குறிப்பிட்ட சரத் வீரசேகர, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் சுற்றுச்சூழலை அழகுபடுத்த அவர் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சுற்றுச்சூழலை அழிப்பது என்பது நாட்டிற்கு இழக்கும் துரோகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
எனவே காடழிப்பு மற்றும் சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் செயற்பட்ட அனைவரையும் கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.