ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டிற்கு செய்த சிறந்த சேவையின் காரணமாக இயற்கை ஆபத்திலும் கூட அக்குடும்பம் பாதுகாக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி பிபில, மெதகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், சஷிந்திர ராஜபக்ஷவின் ஜீப் அடித்துச் செல்லப்பட்டது. ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ஏனையோர் உயிராபத்து ஏதுமின்றி பாதுகாப்பாக தப்பினர்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மொனராகலைப் பகுதியில் கட்ட முடியாத ஒரே பாலத்தால்தான் நான் காயமடைந்திருந்தேன். இருப்பினும், கடவுளின் துணை இருந்தமையினால் எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
மேலும் ராஜபக்ஷ குடும்பத்தினர், நாட்டிற்கு செய்த சேவையின் காரணமாக, இயற்கை ஆபத்திலும் கூட பாதுகாக்கப்படுவர்.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ,பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதிலிருந்தும் கூட அவர் தப்பிக்க முடிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.