எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள் டைக்ரே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் எத்தியோப்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஜி-7 நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை எரித்திரியப் படையினரை விரைவாகவும், நிபந்தனையற்றதாகவும் டைக்ரேயில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தன.
அத்துடன், டைக்ரே உட்பட அனைத்து எத்தியோப்பியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தெளிவான அரசியல் செயன்முறையை நிறுவ வேண்டும் எனவும், இது நம்பகமான தேர்தல்களுக்கும் பரந்த தேசிய நல்லிணக்க செயன்முறைக்கும் வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், டைக்ரேயில் இருந்து எரித்திரியப் படைகளின் விலகல் நடைபெறுகின்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் எத்தியோப்பிய அரசாங்கத்துக்கும் டைக்ரே பிராந்தியத்தை ஆட்சி செய்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் இலட்சக் கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இந்நிலையில், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி போரில் பின்னடைவைச் சந்தித்ததுடன் முன்னணியின் முக்கியஸ்தர்கள் தலைமறைவில் உள்ளதுடன் அவர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், டைக்ரே போரில் எத்தியோப்பியப் படைகளுடன் எரித்திரியப் படைகளும் இணைந்து போரிட்டமை தொடர்பாக சர்வதேச நாடுகள் குற்றஞ்சாட்டிவந்த நிலையில் அண்மையில் எத்தியோப்பிய அரசாங்கம் அதனை ஒப்புக்கொண்டது.
இதேவேளை, டைக்ரேயில் மோதலின்போது பல நூற்றுக்கணக்கான மக்களை எரித்திரியப் படைகள் மனிதாபிமானமற்ற முறையில் கொன்றதாகவும் பாலியல் துன்புறுத்தல்களைச் செய்ததாகவும் மனித உரிமை அமைப்புக்கள் பல ஆதாரங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டைக்ரேயில் இருந்து எரித்திரியப் படைகள் விலகவேண்டும் என்ற கோரிகையை சர்வதேச நாடுகள் முன்வைத்ததுடன் டைக்ரே பிராந்தியத்தில் மனித உரிமைகளையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
இதேவேளை, டைக்ரேயில் நடந்தது இன அழிப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், எத்தியோப்பிய அரசாங்கம் அதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.