யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1000 பயணிகளைக் கையாளும் அளவிற்கு முனையம் உருவாக்கப்படும் என்றும் பெரிய விமானங்களும் தரையிறங்கும் வகையில் ஓடுபாதை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும் கொரோனா தொற்றுநோய் காரணமாக அதைத் தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.