எதிர்க்கட்சித் தலைவர் தனது வழக்கில் தலையிடுவதே தான் சிறையில் இருக்க காரணம் என நீதிமன்றத்தில் சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதனை நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ரஞ்சன் ராமநாயக்கவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் கடிதத்தை கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் விவாதம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான வழக்கின் போது அவருக்கு உதவி புரியாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அவரது ஆசனம் தொடர்பாக போராடுகிறார்கள் என்றும்அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி இல்லை என்றாலும் அவரை சிறையிலிருந்து மீட்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகக் கூறினார்.