குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களுக்குத் தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு நடக்கும் மிகப்பெரிய சதியை முறியடிக்கும் வகையில் பா.ஜ.க. தொண்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 41ஆவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில், கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தமது அரசு உருவாகிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டம் குறித்து மக்களிடத்தில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வேலைகளில், சில தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் பின்புலம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இதனைக் கையாள்வது பா.ஜ.க. தொண்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றபோதும், இதுபற்றி விழிப்பாக இருப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென தொண்டர்களிடம் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்திய மக்களிடம் உள்ள அரசியல் முதிர்ச்சியையும், ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குடிமக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் என எவற்றையும் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.