தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் வாக்கு வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தலில் 72.78 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 வீத வாக்குப் பதிவும் குளித்தலையில் 86 வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், ஆகக் குறைந்த வாக்குப்பதிவாக சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 வீத வாக்குகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 வீத வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்குப் பகுதியில் 60.72 வீத வாக்குகளும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவவேளை, நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களும், கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கெண்ணும் மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.