தமிழ் மற்றும் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விசேட போக்குவரத்து சேவை மற்றும் விசேட ரயில் சேவை ஆகியன முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று ஆரம்பிக்கப்படும் குறித்த சேவைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறுமென போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த செயற்பாட்டுக்காக மேலதிக அரச பேருந்துகள் 192, மேலதிக ரயில்கள் 21 மற்றும் தனியார் பேருந்துகள் 1,800 சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை மக்களுக்கு இந்த சேவையினை உரிய முறையில் வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலினை கருத்திற்கொண்டு பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள் ஏற்றப்பட வேண்டுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.