இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘தெஹிவலையைச் சேர்ந்த ஆணொருவர், (70 வயது) கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தவேளையில், இரத்தம் விஷமானமை, கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவை காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கோண்டாவில்லைச் சேர்ந்த பெண்ணொருவர், (79 வயது) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்கைப் பெற்று வந்த நிலையில், இரத்தம் விஷமானமை, கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா, நீரிழிவு நோய் ஆகியவை காரணமாக, இவரும் நேற்று உயிரிழந்துள்ளார்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று மாத்திரம் புதிதாக 343பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 127பேர், நேற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எணிணிக்கை 91,044 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 699 பேர், சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.