கொரோனா பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்த அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன்போதே மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா அலையின் அதிகபட்ச பாதிப்பை இந்தியா இப்போது கடந்திருக்கிறது. சில மாநிங்களில் நிலைமை மிக மோசமாகவுள்ளது. எனவே இப்போது நாம் சிறிய நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு நாம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். நிர்வாகத்தையும் வலுப்படுத்த வேண்டும். அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனை, பரவல் காரணத்தை கண்டறிதல், சிகிச்சை, கொரோனா பாதுகாப்பு நடைமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற 5 அடுக்கு திட்டத்தை மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன், அடுத்த 72 மணி நேரத்திற்குள், அவருடன் தொடர்பில் இருந்த 30 பேரை கண்டறிதல் வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.