தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.
சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக விவேக், வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில், உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவேக்கின் இதயத்தில் 100 சதவீத அடைப்பு காணப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த அன்னாரின் பூதவுடல், சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், மக்கள் என பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் விவேக்கின் பூதவுடல், விருகம்பாக்கத்தில் இருக்கின்ற மின் தகன மேடையில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, மக்கள் உள்ளங்களில் நீங்காத இடத்தை பிடித்த விவேக், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஆர்வமாக பங்கேற்றவர். அத்துடன் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.