இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்திருந்தது. அதற்கமையவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘களனியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்புக்கு கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காசநோய் ஆகியவையே காரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று குருநாகல் பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்புக்கு கொவிட் நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவையே காரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.