இந்த வார இறுதிக்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவடையுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இலங்கை முழுவதும் அரசாங்கம் வழங்கி வந்தது.
ஆனாலும் நாடு முழுவதும் பெருநாள் முன்கூட்டியே குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத போதிலும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது.
இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பத்தரமுல்லயில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமைக்குள் 2.3 மில்லியன் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த வார இறுதிக்குள் 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2.3 மில்லியன் குடும்பங்களுக்கு 11,500 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அதைப்பெற முடியாதவர்களுக்கு நேற்று முதல் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையினால் புதன்கிழமைக்குள் பிரதேச செயலாளர் ஊடாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இந்த வார இறுதிக்குள் இந்த கொடுப்பன வழங்கும் நடவடிக்கை நிறைவடையுமென நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.